வரலாற்று பெருமை மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலி ஒப்புக்கொடுத்தல் மற்றும் திருச்சொரூப பவனி என்பனவற்றுடன் உற்சவம் நிறைவு பெறும்.
இதில் கலந்து கொள்வதற்காக இன்று யாழ்ப்பாணத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் சுமார் 6ஆயிரம் பேர் கச்சதீவுக்கு சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து 4ஆயிரம் பேரும் தமிழகத்திலிருந்து 2ஆயிரம் பேரும் செல்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
போர் ஆரம்பித்ததன் பின்னர் அங்கு தங்கியிருந்து உற்சவத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்க மறுத்து வந்த சிறிலங்கா அரசாங்கம் இம்முறை தமிழகத்திலிருந்து வருபவர்கள் ஒருநாள் தங்குவதற்கும் யாழ்ப்பாணத்திலிருந்து செல்பவர்கள் இருநாள் இரவு தங்குவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
நெடுந்தீவு பங்குத்தந்தை தலைமையிலான குருமார் திருப்பலியை ஒப்புக்கொடுப்பர்.
இம்முறை யாழ்ப்பாணத்திலிருந்து பெருந்தொகையானோர் செல்வதற்கு ஆர்வம் கொண்டிருந்த போதும் சுமார் 4ஆயிரம் பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் துறைமுகங்களிலிருந்து படகுகள் மூலம் நேற்றுமாலையிலிருந்து செல்ல ஆரம்பித்துள்ளனர். கடற்படையினர் மற்றும் கொழும்பிலிருந்து வந்த சுங்க அதிகாரிகள் பயணிகளை சோதனையிட்ட பின் படகுகளில் அவர்கள் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்ளவென தமிழ்நாடு ராமேஸ்வரத்தில் இருந்து 82 படகுகளில் 2,271 பேர் இன்று காலை புறப்பட்டு சென்றனர். இவர்களுடன் தமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை செய்;தியாளர்கள் பலரும் அங்கு சென்றுள்ளனர்
இராமேஷ்வரம் பங்குத்தந்தையிடம் ஏற்கனவே விண்ணப்பம் செய்திருந்தவர்களுக்கு மட்டும் இன்று அனுமதி வழங்கப்பட்டது.
இவர்களின் கடல்பயணத்திற்கு பாதுகாப்பாக பாதுகாப்பு ஆடைகள் நேற்று மீன்வளத்துறை அலுவலகத்தால் வழங்கப்பட்டது.
இராமேஷ்வரத்திலிருந்து காலை 5 மணி முதல் பகுதி , பகுதியாக இவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். படகு பயணத்தை மேற்கொள்வதற்கு முதல் புலனாய்வுதுறையினர் இந்திய குடிவரவு குடியகல்வுத்துறை அதிகாரிகள், தமிழக காவல்துறையினர் ஆகியோர் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது சிலர் மறைத்து வைத்திருந்த மதுப்போத்தல்கள், பொலித்தீன் பைகள் உட்பட சில பொருட்களை சுங்கப்பகுதியினர் பறிமுதல் செய்தனர்.
கச்சதீவு அந்தோனியார் திருவிழா என்பதற்கு அப்பால் இருநாட்டு மக்களும் சந்தித்து பொருட்களை பண்டமாற்று செய்யும் இடமாகவே நீண்டகாலமாக இருந்து வந்தது.
இலங்கையிலிருந்து செல்பவர்கள் தேங்காய் எண்ணெய், சவர்காரம் ஆகியவற்றை எடுத்து சென்று அங்கு வரும் தமிழக மக்களிடம் பட்டுப்புடவைகள் உட்பட இந்திய உற்பத்தி பொருட்களை பண்டமாற்று செய்து கொள்வது வழக்கமாகும். இரு நாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதி தீவாக விளங்கிய கச்சதீவு 1975 ஒப்பந்தத்திற்கு பின் இலங்கைக்கு சொந்தமானது.
அப்போது சிறிலங்கா தலைமை அமைச்சராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா, இந்திய தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்திக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சதீவில் தமிழக மீனவர்கள் தங்கி மீன்பிடித்து திரும்பவும், கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய விழாவில் எப்போதும் போல் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஒப்பந்தத்திற்கு முன்னர் அந்தோனியார் ஆலய நிர்வாகம் தமிழ்நாடு தங்கச்சிமடம் றோமன் கத்தோலிக்க பங்குத்தந்தையின் கீழ் இருந்த போதிலும் ஒப்பந்தத்தின் பின்னர் நெடுந்தீவு பங்குத்தந்தையே அதன் நிர்வாகத்தை கவனித்து வந்துள்ளார்.
1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி கச்சதீவு திருவிழாவை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்தியது. அதன்பின்னர் 2002ஆம் ஆண்டில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தையடுத்து உற்சவத்தை நடத்த அனுமதி வழங்கிய சிறிலங்கா அரசு அங்கு தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. உற்சவ தினத்தன்று செல்பவர்கள் அன்றே திரும்பிவிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். தமிழகத்திலிருந்தும் வருபவர்களுக்கும் அனுமதி வழங்கவில்லை. இதனால் கச்சதீவு அந்தோனியார் திருவிழா கடந்தகாலங்களில் சோபிக்கவில்லை.
இம்முறை இருநாட்டு பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அந்தோனியார் திருவிழா கலகலப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
கச்சதீவு வரலாறு
கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க பரம்பரையைச்சேர்ந்த சேதுபதி குறுநில மன்னனின் கீழ் இருந்த தீவுக்கூட்டங்களில் கச்சதீவும் ஒன்றாகும். 69 கடற்கரை கிராமங்களும் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத்தீவு, நெடுந்தீவு, பள்ளித்தீவு ஆகிய தீவுகளும், சேதுபதி குறுநில மன்னனின் நிர்வாகத்தில் இருந்ததாக 1622-1635ஆம் ஆண்டுகால செப்பேடு ஒன்றில் கூறப்பட்டிருப்பதாக சென்னைப்பல்கலைக்கழகத்தை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இதன் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் சேதுபதி அரச வாரிசு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் இத்தீவுகளும் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் தமிழகத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அந்தோனியார் கோவில் ஒன்றை கட்டியதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கச்சத்தீவு இராமநாதபுரம் அரச நிர்வாகத்திற்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடனத்தில் கூறியிருந்தார்.
எனினும் கச்சதீவு இந்தியாவை விட இலங்கைக்கு அண்மையில் இருப்பதால் அதன் நிர்வாகம் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று 1975ஆம் ஆண்டில் இருநாட்டு அரசுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது.
மனிதர்கள் நிரந்தரமாக வசிக்காத இந்த தீவு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் களைகட்டும். அண்மைக்காலமாக இந்த தீவும் இதனையண்டிய கடற்பிரதேசமும் சர்ச்சைக்குரியதாக மாறிவருகிறது.